மத்திய உள்துறை அமைச்சகம் எத்தனையோ ரகசிய பட்டியல்களை வைத்திருக்கிறது. அதில் வெளிநாடுவாழ் இந்தியர்களைப் பற்றிய பட்டியலும் ஒன்று. இது கொஞ்சம் விவகாரமான பட்டியல். இதில் ஒரு பெயர் இடம்பெற்றுவிட்டால் உலகில் எங்கிருந்தும் இந்தியாவுக்குள் நுழைய விசா வழங்கப்படமாட்டாது. அப்படியே தவறுதலாக வழங்கிவிட்டாலும் விமானநிலையத்தில் பரிசோதித்து திருப்பி அனுப்பிவிடுவார்கள். இதில் யார் யார் பெயர் இருக்கிறது என்பது பெரிய ரகசியம்.
சமீபத்தில் இந்த பட்டியலில் இருந்த 212 வெளிநாடுவாழ் சீக்கியர்களின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக இவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்தன.
1984-ல் நடந்த ஆபரேஷன் ப்ளூஸ்டார், இந்திராகாந்தி படுகொலை, 1985-ல் கனிஷ்கா விமான குண்டுவெடிப்பு ஆகியவற்றையொட்டி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் புகலிடம் தேடிச் சென்ற சீக்கியர்கள் இவர்கள்.
ஆபரேஷன் புளூஸ்டார் என்பது அம்ருதசரஸின் தங்கக்கோவிலில் புகலிடம் புகுந்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கை. இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.
கனிஷ்கா என்பது போயிங் 247 விமானம். ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமானது. மாண்டியலில் இருந்து புது டெல்லிக்குப் பறந்தபோது அயர்லாந்து நாட்டு வானவெளியில் வெடித்து சிதறியது. 329 பயணிகள் இறந்தனர். குண்டு வைத்தது கனடாவில் இருந்த காலிஸ்தான் இயக்க தீவிரவாத அமைப்பு.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்களாகவும் இந்திய எதிர்ப்பாளர்களாகவும் இருந்த சீக்கியர்கள் பலர் கனடா அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் நுழைந்தனர். மத்திய உளவுத்துறை இவர்களின் பெயர்களை ரகசியப் பட்டியலில் சேர்த்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் இவர்களில் பலர் உயிருடன் இல்லை. இருப்பினும் இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கூட இந்த பட்டியலில் இடம்பெற்றுவிட்டதால் இந்தியாவுக்கு வர விசா மறுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்த பிரதமர் மோடியைச் சந்தித்த சீக்கிய அமைப்பினர் இந்த பிரச்னையில் இருந்து விடுவிக்குமாறும் இவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இப்படி கோரிக்கை விடுப்பதை பல தளங்களில் சீக்கிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் செய்துகொண்டே வந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து மொத்தம் 324 பேர் பட்டியலில் 212 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது எளிதாக நடக்கவில்லை. மத்திய உளவுத்துறை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் பிரதமர் அலுவலகம் தலையிட்டதன்பேரில் இந்தப் பெயர் நீக்கம் நடந்துள்ளது.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சமயத்தில் செய்யப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு அரசியல் ரீதியாக உதவிகரமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே நவ்ஜோத் சிங் சித்து பாஜகவுக்கு எதிராக திரும்பிவிட்டார். கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளத்துடன் பல மட்டங்களில் உரசல், காங்கிரசின் வளர்ச்சி ஆகியவை பாஜகவுக்கு எதிராக இருக்கின்றன. இன்னொரு முனையில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கும் பெருகிக்கொண்டே இருக்கிறது. டெல்லியில் முதலமைச்சராக இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால் அதை துறந்துவிட்டு அதிக அதிகாரம் படைத்த பஞ்சாப் முதல்வர் பதவிக்குப் போட்டியிடவேண்டும் என்று சொல்லப்படும் அளவுக்கு ஆம் ஆத்மி பிற கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது.
சீக்கியர்களைப் பொருத்தவரை இன்னும் காலிஸ்தான் தீவிரவாதியான பிந்தரன்வாலே அவர்கள் நினைவை விட்டு மறையவில்லை. அதே போல் 1984-ல் நடந்த மிகப்பெரிய சீக்கியர்கள் மீதான தாக்குதலும் நினைவை விட்டு அகலவில்லை. பஞ்சாப்பில் இன்னமும் அது உணர்ச்சிகரமான விஷயமே. மறப்போம் மன்னிப்போம் என்ற பாணியை முந்தைய காங்கிரஸ் அரசுகள் கடைப்பிடித்தன. பஞ்சாபிலும் அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. சீக்கியரான மன்மோகன்சிங் நாட்டின் பிரதமராகவே ஆக்கப்பட்டார். ஒரு பிரதமரின் படுகொலையை காங்கிரஸ் கட்சி மெதுவாக காலப்போக்கில் செரித்துகொண்டது. காயங்கள் பெருமளவு ஆறியிருக்கும் நிலையில் கறுப்புப்பட்டியலில் வைக்கப்பட்ட பலரை அதிலிருந்து மத்திய அரசு நீக்கியிருப்பது வரவேற்கதக்க ஒன்றுதான். இதில் அரசியல் காரணங்கள் இருப்பினும்கூட.
இந்த நடவடிக்கை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் பலருக்கு நம்பிக்கையையும் அளித்துள்ளது. தொடர்ச்சியாக கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். அரசியல் சூழல் மாறுகையில் கோரிக்கைகளும் நிறைவேறும் என்பதை இது உணர்த்துகிறது.
செப்டெம்பர், 2016.